பாடசாலைகளுக்கு நன்கொடைகள் பெற்றுக்கொள்ளமுடியாது -ஆளுநர் அதிரடி அறிவிப்பு
பாடசாலைகளில் பாடசாலை அனுமதியின் போது நன்கொடைகள் பெற்றுக்கொள்ளமுடியாது என்றும் அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படின் அதுதொடர்பிலான அனுமதி முன்னரே வடமாகாண கல்வி அமைச்சிடம் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் வட மாகாண கல்விப்பணிப்பாளர்களுடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பொழுது ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் ஆளுநர் வீடியோ தொடர்பாடல் முறை மூலம் பேசியிருந்தார்
பாடசாலைகள் சுற்றறிக்கைகளுக்கமைவாக செயற்படவேண்டும் என்பதுடன் வடமாகாண பாடசாலைகளில் மாணவர் அனுமதியின் போது நன்கொடைகள் வழங்குமாறு கேட்கப்படின் அவை தொடர்பான தகவல்களை ஆளுநர் செயலகத்திற்கு அறியத்தருமாறும், ஆளுநர் செயலகத்தினூடாக குறித்த தகவல்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
மாகாண கல்விப்பணிப்பாளர் வலய கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் இது தொடர்பில்கூடிய அக்கறையுடன் செயற்படவேண்டும் என்றும் ஆளுநர் அறிவுறுத்தல் விடுத்தார்