பாடசாலைகளில் வினைதிறனாக இயங்கும் ஆசிரியர்கள் மீது தற்காலத்தில் அபகீர்த்தியை உண்டாக்கி வருகின்றனர் – ப.தர்மகுமாரன் சுட்டிக் காட்டு
பாடசாலைகளில் வினைதிறனாக இயங்கும் ஆசிரியர்கள் மீது தற்காலத்தில் அபகீர்த்தியை உண்டாக்கி வருவதாக உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் வினைதிறனாக இயங்கும் ஆசிரியர்கள் மீது அபகீர்த்தியை ஏற்படுத்த முனையும் வினைதிறன் அற்ற சிலர் பாடசாலைக்குள் இயங்குகின்றனர். இதில் கல்வித் திணைக்களம் அதிக கரிசனை காட்டவேண்டிய கடப்பாட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதாவது பாடசாலைகளில் மாணவர்களின் ஆற்றல்களை திறன்களை வெளிப்படுத்துவதற்கும் ஒழுக்கத்தைச் சீர்செய்து ஆளுமைமிக்க நல்லபிரஜைகளை உருவாக்க தம்மை அர்ப்பணித்து பணியாற்றும் ஆசிரியர்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள். மாணவர்கள் மீது அதிக செல்வாக்கினை பெறும் ஆசிரியர்களை அதே பாடசாலையில் உள்ள சில அதிபர்கள் மற்றும் சில ஆசிரியர்கள், மாணவர்களை பகடைக்காயாக்கி பெற்றோர்களையும் வலிந்திழுத்து துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டை அதாரமற்ற முறையில் பிரயோகித்து வினைதிறனுடன் செயல்படும் ஆசிரியர்களை பழிவாங்கி பாடசாலையில் இருந்து வெளியேற்ற முயல்கிறார்கள். இன்று இச் செயற்பாடு பரவலாக நடைபெறுவதுடன் ஒரு ஆசிரியர் தீமூட்டி தன்னைத்தானே தீச்சுவாலையாக்கியமை யாவரும் அறிந்ததே. குற்றம் செய்பர் தண்டிக்கப்பட வேண்டும். சமூகத்தில் இருந்து தப்பித்துவிடக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் திட்டமிட்டு மாணவர்களின் நன்மை கருதி செயல்படும் ஆசிரியர்களை குறிவைப்பது, ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல எதிர்கால சமூகத்தையே இருளாக்கிவிடும். இவ்வாறான பிரச்சனைகளை கையாள இரகசிய குழு அமைத்து சரியான முறையில் பக்கச்சார்பின்றி செயலாற்றி மாணவர்களின் நன்மை கருதி செயல்படுபவர்களை சமூக இகழ்ச்சிக்கு ஆளாக்காது, தப்புசெய்பவர்களை சமூகத்தின் முன் நிறுத்துங்கள் நாங்களும் உங்களுடன் வருகிறோம். இங்கு ஊடகசமூகத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளது. ஏனெனில் ஒழுக்கத்தில் முன்னின்ற தமிழினம், தற்போது ஒழுக்கம் என்றால் என்ன? அப்படி என்று ஒன்று இருக்கிறதா? என கேட்கும் வகையில் செயல்படுகிறது. இதையும் தாண்டி பல ஆசிரியர்கள் கை கட்டி வேடிக்கை பார்கின்றனர். சில ஆசிரியர்கள் அதனை திருத்த முயல அவர்கள்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் சேறுவாரிப் பூசப்படுகின்றது. இதனால் பாதிக்கப்படுவது எம் மாணவர்களே என்பதைப் புரிந்து எல்லோரும் ஒன்றாக ஒற்றுமையாக செயலாற்ற முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.