Mon. May 18th, 2026

பரீட்சைக்கு தோற்றிய மாணவனை பாம்பு தீண்டியது. மீண்டும் பரீட்சை எழுதிய மாணவன்

பரீட்சை நிலையத்தில் பாம்பு கடிக்கு இலக்காகிய மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி பரீட்சை நிலையத்தில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் குறித்த பரீட்சை நிலையத்திற்கு வருகை தந்து துவிச்சக்கர வண்டி நிறுத்தும் இடத்தில் நின்றுள்ளார். தற்போது பெய்து வரும் மழையால் இலைச் சருகுகளுக்குள் மறைந்திருந்த பாம்பு மாணவனை தீண்டியுள்ளது.
இதனையடுத்து பரீட்சை நிலைய உத்தியோகத்தினரால் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் உடனடியாக அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த மாணவன் தனது உடலில் எந்த மாற்றமும் இல்லை. தான் பரீட்சை எழுதப் போவதாக வேண்டுகோள் விடுத்தார்.இதனையடுத்து வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு வைத்தியருடன் கலந்துரையாடி, வைத்தியர் மற்றும் இரு தாதிகள் ஆகியோருடன் ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் பரீட்சை நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, மாணவனுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மேலதிக நேரம் வழங்கப்பட்டு பரீட்சை எழுதியுள்ளார். தொடர்ந்தும் வைத்தியர்கள் மாணவனை அவரின் உடல் நிலை தொடர்பாக கண்காணிக்க மீண்டும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed