பரபரப்பான மாகாண மட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மாவட்ட அணி சம்பியன்
வடமாகாண விளையாட்டு திணைக்களம் நடாத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மாவட்ட அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

வடமாகாண விளையாட்டு திணைக்களம் நடாத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓமந்தை உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் நடப்பாண்டு சம்பியனான வவுனியா மாவட்ட அணியை எதிர்த்து யாழ் மாவட்ட அணி மோதியது. 4 காலப்பகுதி ஆட்டங்களாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் இரு கால்பகுதி ஆட்டம் நிறைவடைந்த நிலையில் யாழ் மாவட்ட அணி 14:10, 26:17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். ஆனால் மூன்றாவது கால் பகுதியாட்டத்தில் வவுனியா மாவட்ட அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி யாழ் மாவட்ட அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இதனால் அடுத்த இரண்டு கால் பகுதி ஆட்டங்களும் இரு அணிகளும் பலப் பரீட்சை நடாத்தினர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் யாழ் மாவட்ட அணி 48:41 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.