பரபரப்பான ஆட்டத்தில் றேஞ்சஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது

திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் வடமாகாண ரீதியிலான கால்பந்தாட்ட தொடரில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் நெறிப்படுத்தலுடன் திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகம் தமது
60வது ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு நடாத்தும் அணிக்கு 09 நபர் கொண்ட திக்கம் வெற்றிக்கிண்ணம் மின்னொளியிலான தொடரில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
சூப்பர் 10 போட்டியில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து மணற்காடு சென்அன்ரனீஸ் அணி மோதியது .
இரு அணியில் வெற்றிபெறும் அணியே அரையிறுக்கு தகுதி பெற்றுக் கொள்ளும் என்பதால் போட்டி ஆரம்பித்த நிமிடத்தில் இருந்தே விறுவிறுப்பாக இடம்பெற்றது. முதல் பாதியாட்டத்தில் 10வது நிமிடத்தில் றேஞ்சஸ் அணி வீரர் ஆர்த்திகன் முதலாவது கோலைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து மேலும் உற்சாகம் அடைந்த றேஞ்சஸ் அணி வீரர் கிருசிகன் 14வது நிமிடத்தில் ஒரு கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் றேஞ்சஸ் அணி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் பலமான முறையில் மோதிய போதிலும் இரு அணிகளாலும் கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.போட்டியின் ஆட்டநாயகனாக றேஞ்சஸ் அணியின் முன்கள வீரர் கிருசிகன் தெரிவு செய்யப்பட்டார்.