பரபரப்பான ஆட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி சம்பியன்
வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் பாடசாலை அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் இரு அணிகளாலும் கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். மூன்றாம் இடத்தை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி பெற்றனர்.