பரபரப்பான ஆட்டத்தில் கெருடாவில் கிண்ணத்தை ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சுவீகரித்துக் கொண்டனர்.
கெருடாவில் இளந்துளிர் அமையமும் இளந்துளிர் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்திய யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான வொலிபோல் போட்டியில் பலத்த போராட்டத்தின் மத்தியில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
கெருடாவில் இளந்துளிர் அமையமும் இளந்துளிர் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்திய யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான வொலிபோல் தொடரின் இறுதியாட்டம் கடந்த திங்கட்கிழமை குறித்த கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து புத்தூர் வளர்மதி அணி மோதியது.
5 சுற்றுக்கள் கொண்ட போட்டியில் முதலாவது சுற்றில் புத்தூர் வளர்மதி அணி வெற்றி பெற்றனர். ஆனால் தாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக ஆவரங்கால் இந்து இளைஞர் அணி அடுத்த இரண்டு சுற்றுக்களிலும் வெற்றி பெற்றனர். நான்காவது சுற்றை புத்தூர் வளர்மதி அணி அபாரமாக விளையாடி அசத்தினர். இதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் 5வது சுற்று இரு அணிகளுக்கும் பெரும் சவாலாக மாறியது. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 15:13 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர் .
இளந்துளிர் விளையாட்டுக் கழக தலைவர் இ. தீபராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக சட்டத்தரணியும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான மகாலிங்கம் மயூரன் சிறப்பு விருந்தினராக வல்வெட்டித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கிருஷாந்த பீரிஸ், கெளரவ விருந்தினர்களாக கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் லோ. சுவேந்திரா, கரவெட்டி சிறிநாரதா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் அ. தமிழ்ச்செல்வன், உடுத்துறை மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் த. மயூரன், சிறப்பு அதிதிகளாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளர் தயாளபாலன், யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் உப தலைவர் சுதந்திரதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.