பயிற்றுவிப்பாளர்கள் மாலை 5 மணிவரை கடமையில் ஈடுபட வேண்டும் – மாகாண கல்விப் பணிப்பாளர்
வடமாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் பிற்பகல் 5 மணி வரை பாடசாலைகளில் விளையாட்டுக்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண கல்வி வலய அதிபர்களுக்கான கலந்துரையாடல் இன்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாண கல்வி வலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் கடமையாற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் பலர் பயிற்றுவிக்கும் நடவடிக்கையை விடுத்து பாடசாலைகளில் வெவ்வேறு வேலைகளை செய்கின்றனர். சில பயிற்றுவிப்பாளர்கள் பொருத்தமான மாணவர்கள் இல்லை என குறிப்பிடுகின்றனர். குழுப் போட்டிகளில் தயார்ப்படுத்த முடியாவிட்டால் தனிப் போட்டிகளிலாவது பயிற்றுவிக்க வேண்டும். விளையாட்டில் அக்கறை செலுத்தாமையால் பல மாணவர்கள் தொற்றா நோய்களுக்கு உட்படுகின்றனர். இதனை தடுப்பதற்காவது பயிற்றுவிப்பாளர்கள் தமது கடமைகளை சரிவரச் செய்தல் வேண்டும். இன்று நடைபெற்ற அதிபர்களுக்கான கூட்டத்தில் ஒருசில அதிபர்களே பயிற்றுவிப்பாளர்கள் பாடசாலைகளில் 5 மணிவரை நிற்பதாக குறிப்பிட்டுள்ளனர். ஏனையோர் பாடசாலை முடிவடையும் நேரத்துடன் வீடு செல்கின்றனர். மாணவர்கள் நிற்பதில்லை என்கின்ற காரணத்தை விடுத்து, மாணவர்கள் நிற்கிறார்களோ இல்லையோ பயிற்றுவிப்பாளர்கள் 5 மணிவரை நிற்க வேண்டும். இன்று முதல் பாடசாலைகளில் இது தொடர்பான கண்காணிப்பு இடம்பெறும். குறித்த நேரம் வரை நிற்காத பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சிற்கு அறிவிக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றேன். அத்துடன் இதனை மேற்பார்வை செய்யும் பொறுப்பு அதிபர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்குரியது. குறித்த நியமங்களில் கடமைபுரிவோர் குறித்த நேரம்வரை கடமையில் ஈடுபட வேண்டும். இது நிதியுடன் சம்பந்தப்பட்ட விடயம். இது தொடர்பாக அதிபர்கள் முக்கிய கவனம் எடுக்க வேண்டும். குறித்த நேரம் வரை நிற்காத பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பாக எனக்கு அறியத்தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.