நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள மலசலகூடம் புனரமைப்பு வேலைத்திட்டம் – தவிசாளருக்கு பலரும் பாராட்டு

பொதுமக்கள் பல காலமாக எதிர்நோக்கிய பிரச்சனைகளில் ஒன்றான நெல்லியடி பஸ் நிலைய மலசல கூட புனரமைத்தல் வேலைத்திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படக் கூடியதாக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
நெல்லியடி பஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மலசல கூடங்கள் பல மாதங்களாக பாவனைக்குரியதாக ஆக்கப்பட்டிருக்கவில்லை. மிக அத்தியாவசியமானதும் மிக விரைந்து மேற்கொள்ள கூடியதொரு மக்களின் தேவையாக நாங்கள் சபையை பொறுப்பேற்று வேலைத்திட்டங்கள் பற்றி ஆராய்ந்த போது எமது செயற்திட்டங்களின் முதல் திட்டமாக இதனை தெரிவு செய்துள்ளோம். ஏற்கனவே இவ்வாறான வேலைத்திட்டத்துக்குரிய ஒதுக்கீடுகள் இருந்த போதும் சில இடையூறுகளினால் காலதாமதங்கள் இருந்துள்ளமை எம்மால் உணரப்பட்டு, இலங்கை போக்குவரத்து சபையின் உதவி முகாமையாளர், எமது சபையின் செயலாளர், துறைசார்ந்த அலுவலர்கள், சபை உறுப்பினர்கள் என 2025.06.23 ஆம் திகதியன்று கள விஜயம் செய்து ஆராய்ந்துள்ளோம்.
இதில் அதிகாலை, இரவு வேலைகளில் பல மணி நேரம் பயணங்களை மேற்கொண்டு வருகின்ற பயணிகள் இயற்கை உபாதைகளை நீக்குவதற்குரிய முக்கியமான ஒரு சேவையாக அனைவராலும் உணரப்பட்டுள்ளது. இவ்வாறான சேவைகளை சபை செய்து தர வேண்டும் என பிரதேச சபை மற்றும் இலங்கை போக்குவரத்து சபை நிர்வாகத்திற்கும் எதிராக பொதுமகன் ஒருவர் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் வழக்கு தொடுத்து பொதுமகனுக்கு சார்பாகவே தீர்ப்புகளும் உள்ளது. எனினும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து மக்களுக்குரிய சேவையை நிறைவேற்ற வேண்டியது எமது கடமையாததால், முழுமையாக புனரமைத்து மக்களின் பாவனைக்கு விரைவாக கையளிக்கும் நடவடிக்ககைளை மேற்கொண்டுள்ளோம். எங்களுடன் இணைந்து செயற்திட்டத்தின் வெற்றிக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி உதவுமாறு மக்களை கோருகின்றேன். என வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளரான திரு குமாரசாமி சுரேந்திரன் அவர்கள் தெரித்தார்.
சபையானது கடந்த 17ஆம் திகதியன்று சபை ஸ்தாபிக்கப்பட்டது. முதற் செயற்பாடாக மக்களுக்கு தேவை என உணரப்பட்ட இச் செயற்திட்டத்தை துரிதமாக செய்வற்குரிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தவிசாளருக்கு பலரும் பாரட்டுத் தெரிவித்துள்ளனர்.