நெல்லியடி நகரத்தில் திலீபன் அண்ணணையின் நினைவேந்தல் ஏற்பாடுகளுக்கு பொலிசார் அனுமதி மறுப்பு – உப தவிசாளர் தயாபரன் காட்டம்
நெல்லியடி நகரத்தில் திலீபன் அண்ணணையின் நினைவேந்தல் ஏற்பாடுகளுக்கு பொலிசார் அனுமதி மறுப்புத் தெரிவித்துள்ளதாக கரவெட்டி வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் தியாகராசா தயாபரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபன் அண்ணாவை நினைவுகூரும் முகமாக இறுதி மூன்று நாட்களும் நெல்லியடி பஸ் நிலையத்தில் பந்தல் அமைத்து நினைவு கூர்வதற்கான ஏற்பாடுகளுக்கான ஆயத்தங்கள் செய்யப்பட நிலையில் எந்த ஒரு நடவடிக்கையினையும் செய்ய வேண்டாம் என்று நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எனக்கு நேரடியாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் அவர்களின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒலி பெருக்கி பாவணைக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வதற்காக நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு நானும் சக பிரதேச சபை உறுப்பினரான தர்மலிங்கம் நிமலன் அவர்களும் நேற்று சென்றிருந்தோம்.
எமது ஒலிபெருக்கி அனுமதிக்கான கடிதத்தை கூட வேண்ட மறுத்து எந்த ஒரு நினைவேந்தல் முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என்றும் மீறி செய்தால் அதனை அகற்றுவதற்குரிய நடவடிக்கையினை கட்டாயம் எடுப்போம் என்றும் செயற்படும் நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம் என்றும் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
அத்துடன் என்னுடைய தேசிய அடையாள அட்டை மற்றும் உப தவிசாளர் அடையாள அட்டைகளை பொலிஸ் பெற்றுக் கொண்டு புகைப்படம் எடுத்தபின்னர் மீள ஒப்படைத்திருந்தார்கள்
இந்த அரசாங்கம் நினைவேந்தல் விடயங்களை செய்யவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பது பொலிசாரின் உரையாடலில் இருந்து எமக்கு தெரிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.