Wed. Sep 18th, 2024

நண்பன் என்று சொல்லி சொல்லியே பொதுமேடையில் சேரனை அநாகரிகமாக விற்ற அமீர்

இந்த வாரம் இடம்பெற்ற ஒரு படவெளியீட்டு விழாவில் பேசிய டைரக்டர் அமீர் அவர்கள் பிக் பாஸ் பற்றியும் டைரக்டர் சேரன் பற்றியும் கைதட்டலுக்கு மத்தியில் உரையாற்றி இருந்தார்.
இந்த கதைகளின் நடுவே சேரன் பல வெற்றிப்படங்களை கொடுத்து உயரத்தில் இருந்த வேளை தாங்கள் எல்லாம் சாதிக்காமல் இருந்ததாகவும், ஆனால் இப்போ சேரன் வீழ்ந்து பிக் பாஸ் வீட்டில் இருப்பது போலவும் தான் உயரத்தில் இருப்பது போலவும் நாசுக்காக கூறினார். இதை தான் கூறுவது சீனிமாவில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் என்பதுபோல கூறி முடித்தார்.

எனக்குள் முதலில் தோன்றியது, சேரனின் வாழ்க்கையை உதாரணமாக எடுத்து பொது மேடையில் பேசுவதற்கு இவருக்கு யார் அனுமதி கொடுத்தது. தான் சேரனின் குடுமப நண்பன் என்று கூறிக்கொண்டே சேரனின் வாழ்க்கையையும் அவரின் நிதிப்பிரச்னையையும் பொதுமேடையில் பேசும் நாகரிகமற்ற நிலைக்கு அமீர் வருவதற்கு காரணம் சேரன் மீது உள்ள காழ்ப்புணச்சியா என்று எண்ண தோன்றுகின்றது.

சேரன் என்பவர் ஒரு குழந்தை இல்லை. பல வெற்றிப்படங்களை தந்த இயக்குனர். தனது சொந்த முயற்சியாலும் சொந்த திறமையாலுமே பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அப்படி இருக்கையில் அவர் சின்ன பிள்ளை தனமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றுவதாகவும் இறுதியில் அவரின் நிதிப்பிரச்சினையினால் பங்குபற்றுவதாகவும் அமீர் கூறிமுடித்தார். மக்களின் நாடித்துடிப்பை அறிந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனருக்கு தெரியாதா தான் என்ன செய்கிறேன் என்று. அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுவதன் மூலம் அவரின் திட்டம் என்னவாகவும் இருக்கலாம். காசு சம்பாதிக்க அவர் அங்கு சென்றிருந்தால் கூட அதில் என்ன பிழை உள்ளது. அவர் அங்கு சென்றது யாரையும் கொள்ளை அடிக்கவோ அல்லது கூட்டிகொடுத்து மாமா வேலை செய்யவோ அல்ல. தனது பிள்ளைகளுக்காகவே வந்திருக்கிறேன் என்றே அவர் சொன்னார். நாங்கள் இப்போ குடும்ப நண்பன் என்று சொல்லும் நீங்கள் உங்களின் கருத்தை அவரிடம் நேரடியாகவல்லவோ சொல்லி இருக்க வேண்டும். அதைவிடுத்து அவரின் கஷ்டங்கள் நஷ்டங்களை கூட்டம்போட்டு கைத்தட்டலுக்கு மத்தியிலா சொல்லுவீர்கள் ?

மேலும் கூறிய நீங்கள் அவருடன் பழக்கம் குறைவாக இருந்த தருணத்திலேயே, நீங்களே முப்பது, நாற்பது ஆயிரத்துக்கு அல்லாடிய போது அவருக்கு ஒரு லட்சம் ரூபா கொடுக்க முன்வந்ததாக குறிப்பிட்டீர்கள். இதனை நம்பினாலும் கூட, அவர் உங்களிடம் ஒரு லட்சம் ரூபா ஏமாத்தியிருந்தால் பெற்றிருக்க கூடிய கைதட்டலுக்கு மேலேயே பெற்றுவிட்டீர்கள் இதை பொதுவிடத்தில் சொல்லி .

நான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை இனிமேலும் பார்க்கமாட்டடேன். யாரோ காட்டிய வீடியோ கிளிப்பை பார்த்ததாக கூறினீர்கள். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த சமூகத்துக்கு தேவையில்லை என்றும் கூறினீர்கள், எதோ நீங்கள் தான் இந்த சமூகத்தின் காவலன் என்று. நான் ஒன்று மட்டும் கேட்க்கிறேன் நீங்கள் எடுக்கும் சினிமா மட்டும் இந்த சமூகத்துக்கு தேவையா? எதை வைத்து நீங்கள் இதை கூறினீர்கள். அப்படி என்ன தான் உங்கள் சினிமாக்களில் இல்லாததை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டிவிட்டார்கள். என்னை பொறுத்தவரையில் உங்கள் சினிமாக்களில் காட்டிய கவர்ச்சியில் 50% விகிதத்தை கூட அவர்கள் காட்டியதாக தெரியவில்லை. நீங்கள் எடுக்கும் சினிமாக்கள் இந்த சமூகத்தை சீரழிப்பதாக எத்தனை சமூக ஆர்வலர்கள் காலம் காலமாக கத்திக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் எதைவைத்து உங்கள் சினிமா மக்களுக்கு தேவை , பிக் பாஸ் தேவையில்லை என்று சொன்னீர்கள் . திடிரென்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 1000 கோடியை அள்ளிக்கொண்டு போகிறார்கள் என்ற வைத்தெரிச்சலிலா பேசுகிறீர்கள்?

நான் அறிந்த வரையில் மக்களுக்கு தேவையானது நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சி. அது சீரியல் ஆக இருந்தால் என்ன உங்கள் சினமாவாகட்டும் ஏன் நீங்கள் வெறுக்கின்ற பிக் பாஸ் ஆகட்டும். இதை மக்களின் முடிவில் விடவேண்டியதுதானே. அந்த நிகழ்ச்சிக்கு நல்ல TRP இருக்கென்றால் மக்கள் அதை விரும்பி பார்க்கிறார்கள் என்றுதானே அர்த்தம். அப்படி இருக்கையில் நீங்கள் தான் எல்லாம் தெரிந்தவராகவும் அந்த நிகழ்ச்சியை பார்க்கின்ற மக்கள் எல்லாம் முட்டாள்களாகவும் நீங்கள் அர்த்தப்படுத்துவது உங்களுக்கு அதிகபிரசங்கித்தனமாக தோன்றவில்லையா?

பேச்சின் முடிவில் ஒன்று சொன்னீர்கள், நீங்கள் மூன்று விஷயங்களை கேட்டு பெறுவதில்லை என்று அதிலொன்று கைதட்டல். கேட்கவே ஆச்சரியமாக இருந்தது. உங்கள் குடும்ப நண்பனின் கஷ்டத்தையும் அவரின் சுயமுடிவையும் ஒரு பொதுவிடத்தில் கைதட்டல் வாங்குவதற்காக பேசும் நீங்கள் இதையெல்லாம் கூறலாமா அமீர்??

இதை எழுதும் நான் ஒ ரு சேரனின் ரசிகனோ அல்லது விசுவாசியோ அல்ல. ஆனால் நீங்க சொன்னமாதிரி சினிமாவில் எதுவும் நிரந்தரம் இல்லை என்றால், சேரனின் இந்த நிலையும் நிரந்தரமாகக்கூடாது என்று உங்களின் பேச்சை கேட்டபிறகு எண்ண தோன்றுகின்றது.

நான் இன்றுவரை உங்களை ஒரு நல்ல இயக்குனராகவும் எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல சமூக அக்கறை உள்ள ஒரு மனிதராகவும் வாசித்து அறிந்துள்ளேன். உங்களுடைய இந்த உரையை கேட்டபோதே எனக்கு இதை எழுத தோன்றியது.

நியூஸ் தமிழுக்கு கனடாவிலிருந்து ஒரு வாசகர் எழுதி அனுப்பியது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்