நடேசலிங்கம் – பிரியா குடும்பம் கிறிஸ்மஸ் தீவுக்கு அதிரடியாக மாற்றம்- நாடுகடத்துவதில் ஆஸ்திரேலியா தீவிரம்
இலங்கையை சேர்ந்த தமிழர்களான நடேசலிங்கம் மற்றும் பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கை இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் வடபகுதி நகரான டார்வினில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை திடீரென்று கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் இரவிலிருந்து குறித்த குடும்பத்துடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டதாகவும் இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலை தடுப்பதற்காக போராடும் குழு அறிக்கை வெளிட்டுள்ளது .
நேற்று முன்தினம் நடேசலிங்கம் – பிரியா குடும்பம் மெல்பேர்னில் இருந்து விமானத்தில் ஏற்றபட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் ஆஸ்திரேலிய நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய அவர்களை ஏற்றி சென்ற விமானம் 3000 km தூரத்தில் வைத்து திருப்பப்பட்டு ஆஸ்திரேலியாவின் இன்னொரு நகரமான டார்வினில் இறக்கப்பட்டு, நாடுகடத்தல் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது . இந்த நிலையில் அவர்கள் குடும்பமாக கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது
இதனை தொடர்ந்து , அவர்களின் நாடுகடத்தலை தடுத்து நிறுத்தி மீண்டும் அவர்களின் வசிப்பிடமான பிலோலேயில் வாழ அனுமதிக்குமாறு அவுஸ்திரேலிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இன்று மதியம் நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருந்தொகையான பொதுமக்கள் இவர்களை நாடுகடத்துவதை எதிர்ப்பதாக கூறியும் அவர்களை ஆஸ்திரேலியாவில் வாழ விடவேண்டும் என்று கூறியும் தமது கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது