தொடரும் வறட்சியுடனான காலநிலை: பயிர்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை
கடந்த சில மாதங்களாக நாட்டில் கடும் வறட்சி நிலவி வருகின்ற நிலையில் குறித்த வறட்சியின் காரணமாக விவசாயிகள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதன்படி மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராசமடுப் பகுதியில் வசிக்கும் மக்களின் தோட்டப் பயிர்ச் செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தில் அதிகளவான தோட்டங்களில் கத்தரிச் செடி பயிரிடப்பட்டுள்ளதுடன் பிரதேச மக்கள் மேட்டுநிலப் பயிர்ச் செய்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் இங்கு நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையை அடுத்து தோட்டப்பயிர்ச்செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடும் வறட்சியின் காரணத்தினால் கிணற்றில் இருந்து நீர் இறைப்பதன் மூலமே பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
இக்காரணத்தினால் செடிகளில் அதிகளவான பூக்கள் பூப்பதில்லை எனவும் குறைந்த அளவில் காய்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகள் கடும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.