தேசிய விளையாட்டு வீரர்களை பிரதிநிதித்துவம் செய்த வீரர்களை துவசம் செய்து கொலின்ஸ் அணி சம்பியன்

தேசிய விளையாட்டு வீரர்களை பிரதிநிதித்துவம் செய்த வீரர்களை துவசம் செய்து மன்னார் எருக்கலம்பிட்டி கால்பந்தாட்ட கிண்ணத்தை வடமராட்சி கொலின்ஸ் அணியினர் கைப்பற்றினர்.
மன்னார் எருக்கலம்பிட்டி விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியில் நடாத்திய 40 வயதிற்கு மேற்பட்ட வீரர்களுக்கான கால்பந்தாட்ட போட்டி மன்னார் எருக்கலம்பிட்டி விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் வடமராட்சி கொலின்ஸ் அணியை எதிர்த்து வடமராட்சி சொக்கர் மாஸ்டர் அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதினர். இதில் முதலாவது கோலை கொலின்ஸ் அணி வீரர் ராஜா பதிவு செய்ய அதற்கு சொக்கர் மாஸ்டர் அணி வீரர் இலங்கேஸ்வரன் தமது அணி சார்பாக ஒரு கோலைப் பதிவு செய்து கோல்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தினார்.
இதனால் இரண்டாவது பாதியாட்டம் இரு அணிகளுக்கும் சவாலாக அமைந்தது. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் கொலின்ஸ் அணி வீரர் பிரவீன்குமார் மிகச் சிறப்பான கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் வடமராட்சி கொலின்ஸ் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
ஆட்ட நாயகனாக கொலின்ஸ் அணியை பிரதிநிதித்துவம் செய்த அகிலதீபன், சிறந்த கோல் காப்பாளராக கொலின்ஸ் அணியை பிரதிநிதித்துவம் செய்த சத்தியேந்திரா ஆகியோரும் சிறந்த விளையாட்டு வீரர்களாக சொக்கர் மாஸ்டர் அணி வீரர் சுதாகரன் மற்றும் கொலின்ஸ் அணி வீரர் ராஜா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.