தேசிய மட்ட கடற்கரை வொலிபோலில் சிதம்பரக் கல்லூரி வெண்கலம் வென்று சாதனை
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கடற்கரை வொலிபோல் போட்டியில் யா/ சிதம்பரக் கல்லூரி வெண்கல பதக்கத்தை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான கடற்கரை வொலிபோல் போட்டி இன்று சனிக்கிழமை நீர்கொழும்பு கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி அணியை எதிர்த்து றோயல் கல்லூரி அணி மோதியது. முதலாவது செற்றில் றோயல் கல்லூரி அணி வெற்றி பெற்ற இரண்டாவது செற்றில் சிதம்பரக் கல்லூரி அணி வெற்றி பெற்று ஆட்டத்தை சமநிலைப்படுத்தினர். இதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செற்றில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இறுதிவரை இரு அணிகளும் வெற்றிக்காக போராடினர். இருப்பினும் பலத்த போராட்டத்தில் சிதம்பரக் கல்லூரி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.