தேசிய மட்ட உதைபந்தாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி சாதிப்பு
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மைலோ கிண்ணத்திற்கான தேசிய மட்ட போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
மைலோ கிண்ணத்திற்கான 16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் இன்று ரீஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து பதுளை தர்மடுத கல்லூரி அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதில் முதலில் பதுளை தர்மடுத கல்லூரி அணி வீரர் ஒரு கோலைப் பதிவு செய்ய அதற்கு நெல்லியடி மத்திய கல்லூரி அணி பதிலடி கொடுத்து கோல்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தினர். இதனால் இரண்டாவது பாதியாட்டம் இரு அணிகளுக்கும் சவாலாக இருந்தது. இறுதி வரை இரு அணிகளும் பலப் பரீட்சை நடாத்தினர். இருப்பினும் இரு அணிகளாலும் மேலதிக கோல்களைப் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி 5:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.