Sun. Sep 15th, 2024

தீவிரவாதியின் உடல்பாகங்களை புதைக்க நீதிபதி உத்தரவு, மீண்டும் போராட்டக்களமாகுமா மட்டக்களப்பு

மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரியான மொஹமட் ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்களை எதிர்வரும் 26ம் திகதிக்கு முன்னர் புதைப்பதற்கான நடவடிக்கையை அரசாங்க அதிபர் ஊடாக மேற்கொள்ளுமாறு புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் இன்று பிறப்பித்தார். கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மொஹமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதவான் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இதனை மட்டக்களப்பு, புதூர் ஆலையடி மயானத்தில் புதைக்க முற்பட்டவேளை அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததையடுத்து ,கள்ளியங்காடு மற்றும் காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் உடல் பாகங்களை புதைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதற்கும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன.. இந்தநிலையில் கடந்த மாதம் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் குறித்த உடற்பாகங்கள் இரவோடு இரவாக புதைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உட்பட பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து , இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த குறித்த உடற்பாகங்கள், நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு , மீண்டும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் பிரேத அறைக்கு கொண்டுவரப்பட்டது . குறித்த தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரின் வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது மீண்டும் உடற்பாகங்களை அரசாங்க அதிபர் ஊடாக எதிர்வரும் 26 ம் திகதிக்கு முன்னர் புதைக்குமாறும் அதன் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் குற்றப்புலனாய்பு பிரிவினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்