திசாந் ஞாபகார்த்தமாக கிண்ணம் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வசம்

திசாந் ஞாபகார்த்தமாக கிண்ணத்தை கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி கைப்பற்றி 2025ம் ஆண்டுக்கான முதலாவது சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட பெருமையையும் பெற்றுள்ளனர்.

திசாந் ஞாபகார்த்தமாக திசாந் நற்பணி மன்றத்தினரால் 23 வயதிற்கு உட்பட்ட வடமராட்சி இளையோர் அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து நவிண்டில் கலைமதி அணி மோதியது.

முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் 13வது நிமிடத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணிக்கு நேர் உதை கிடைத்தது. இதனை அவ்வணி வீரர் சுயாஸ் அடிக்க, அப்பந்து கோல் கம்பத்தில் பட்டு கோலாக மாற முதல் பாதியாட்டத்தில் றேஞ்சஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.

இரண்டாவது பாதியாட்டத்திலும் ஆட்டத்தின் வேகம் இரட்டிப்பாகியது. இதில் நவிண்டில் கலைமதி அணி வீரர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைத்த போதிலும் கோலாக்க தவறி விட்டனர். ஆனால் ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் றேஞ்சஸ் அணி வீரர் சர்மிலன் சிறப்பான கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் றேஞ்சஸ் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

ஆட்ட நாயகனாக றேஞ்சஸ் அணி வீரர் கிருஷிகன், தொடர் ஆட்ட நாயகனாக றேஞ்சஸ் அணி வீரர் சர்மிலன்,சிறந்த பின்கள வீரராக கலைமதி அணி வீரர், வினோத், சிறந்த கோல் கீப்பராக றேஞ்சஸ் அணி வீரர் ஆர்நிகன், வளர்ந்து வரும் வீரராக கலைமதி அணி வீரர் சாருஜன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.