Thu. Sep 17th, 2026

தார்வீதிகளில் நெல்லை உலர்த்துவதால் உணவின் தரப்பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது – மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்

தார்வீதிகளில் நெல்லை உலர்த்துவதால் உணவின் தரப்பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.

அறுவடையின்பின் நெல்லை உலர்த்துவதற்கு தார்வீதிகளைப்பயன்படுத்துவதால் நெல்லுடன் நச்சுத்தன்மையான இரசாயனங்கள் சேர்ந்து நெல்லரிசியின் உணவுத் தரம் கேள்விக்குறியாகின்றது. எனவே நெல்லை அதற்கான சீமெந்து மேடைகளிலோ தறப்பாள்ஙளிலோ அல்லது இயந்திரங்கள் மூலம் உலர்த்துவதே உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் எனத் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கையின் பொது சுகாதார அலகின் நூறாவது ஆண்டு நிகழ்வு பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலுந்தெரிவிக்கையில்,
வீதியில் நெல் உலர்த்துவதால் போக்குவரத்து இடர்பாடுகள் விபத்துக்கள் அதனால் உருவாகும் உயிரிழப்புக்ளையும் தாண்டி வெற்றுக்கண்ணுக்கு தெரியாத பல பாதக விளைவுகளும் உள்ளன.
தார் ஆனது பண்படுத்தப்படாத எண்ணைப் பிரித்தெடுப்பில் உருவாகும் பெற்றோலியப் பொருளாகும். இதில் ஈயம், கட்மியம், நாகம் போன்ற பார உலோகங்களும் மாசாகக் கலந்திருக்கும். அத்துடன் வாகனச் சக்கரங்களின் ரயர்த் தேய்மானத்து துணிக்கைகள், வேகத்தடுப்பு உதிரிப்பாகங்களின் தேய்மான துணிக்கைகள், தெருவில் சிந்தும் வாகன மசகு எண்ணை மற்றும் எரிபொருள் என்பனவற்றின் மாசுகளும் வெப்பமான சூழ்நிலையில் அதில் உலரவிடப்படும் நெல்மணிகளினூடாக அரிசியை அடையும் வாய்புகள் உள்ளன. இந்த அரிசியை நீண்டநாட்களுக்கு உண்ணும்போது அதனால் ஈரல், சிறுநீரகம், மூளை போன்ற முக்கிய அங்கங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. இது உளவியல் ரீதியான மற்றும் சமூக விலகல் நடத்தைகளையும் ஏற்படுத்த துணைபுரிவதோடு குழந்தைகளில் வளர்ச்சி நிலைக் கோளாறுகளையும் ஏற்படத்தக்கூடியன.
இதுகுறித்த விழிப்புணர்வை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். விவசாயிகள் தமது நெல்லை தார்வீதிகளைத் தவிர்த்து பாதுகாப்பான முறைகளில் உலர்த்தி நெல்லின் தரத்தைப்பாதுகாக்க முன்வரவேண்டும்.
நாம் வர்த்தக நிலையங்களில் வாங்கும் அரிசி தார்வீதிகளில் உலர்த்தப்பட்ட தரமற்ற பாதுகாப்பற்ற அரிசியா அல்லது பாதுகாப்பானதா என்பதை நுகர்வோரோ சிறுவர்த்தகரோ உறுதிப்படுத்த முடியாது. எனவே சாதாரண பொதுமக்கள் தமக்குத் தேவையான நெல்லை அறுவடையின் போதே கொள்வனவு செய்து தங்கள் வீடுகளில் தறப்பாள் அல்லது மேடைகளில் உலர்த்தி அரிசியாக்கிப் பயன்படுத்துவதே பாதுகாப்பானதாகும்.
அத்துடன் வீதிகளில் நெல் காய விடுவதைத் தடுக்க சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்கள் விழிப்புணர்வையும் சட்டரீதியான தடுப்பு நடவடிக்கைகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கவேண்டியது அவசியமானதுமாகும் என்றார்.

About The Author

Share This:

Leave a Reply