ஜான்குட்டியின் அதிரடியான ஆட்டம் தேசிய மட்ட கால்பந்தில் வசாவிளான் மத்திய கல்லூரி அணி சம்பியன்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட காற்பந்தாட்ட போட்டியில் வசாவிளான் மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான தேசிய மட்ட கால்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் இன்று அநுராதபுர மைதானத்தில் நடைபெற்றது.

இதன் இறுதியாட்டத்தில் வடமாகாணத்தில் மிகவும் பலம் பொருந்திய அணிகளான வசாவிளான் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து புங்குடுதீவு மத்திய கல்லூரி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இருப்பினும் வசாவிளான் மத்திய கல்லூரி அணி வீரர் கஜனிகன் (ஜான்குட்டி) மிகச் சிறப்பான கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் வசாவிளான் மத்திய கல்லூரி அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.

இரண்டாவது பாதியாட்டத்திலும் இரு அணிகளும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதிலும் வசாவிளான் மத்திய கல்லூரி வீரர் கஜனிகன் மீண்டும் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் வசாவிளான் மத்திய கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
சிறந்த விளையாட்டு வீரராக வசாவிளான் மத்திய கல்லூரி அணி வீரர் கஜனிகன் தெரிவு செய்யப்பட்டார். இக் கல்லூரிக்கு டனிஸ்ரன் விஜயகுமார் பயிற்சி வழங்குவது குறிப்பிடத்தக்கது.