ஜனாதிபதி மற்றும் பிரதமர் வடக்கிற்கு விஜயம்
எதிர்வரும் 7ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வடக்கே பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் இலங்கை விமானப் படையின் உலங்கு வானூர்தியில் கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணத்துக்குச் சென்று திரும்புவார்கள் எனக் கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
‘எண்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சியின் மூன்றாவது தேசிய நிகழ்வு எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்குபற்றுகின்றனர்.
இந்த நிகழ்வின் ஆரம்பப் பணிகளுக்கு மட்டும் 6 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, யாழ். மாநகர சபையின் மாநகரக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். ஜனாதிபதியும் இந்த நிகழ்வில் பங்குபற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.