சூடு பிடிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தேர்வு

ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்பை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தல் விடுதிருப்பதாக தெரியவருகிறது அவசர கூட்டங்களுக்கு அழைகபட்டால் , உடனடியாக கலந்துக் கொள்ளும் தூரத்துக்கு அப்பால் செல்ல வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிபந்தனைகளுடன் சஜித் பிரேமதாசாவை வேட்பாளராக அறிவிக்க சம்மதம் தெரிவித்திருந்த பிரதமர், அந்த நிபந்தனைகளுக்கு சஜித் எழுத்துமூலம் சம்மதம் தெரிவிக்காதவிடத்து நாளைய தினம் வேட்பாளர் குறித்து வாக்கெடுப்பு இடம்பெறும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று அலரிமாளிகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியல்ல, ரவி கருணாநாயக்க, கபீர் ஹசீம், நவீன் திஸாநாயக்க, உள்ளிட்டவர்கள் இதில் கலந்துக் கொண்டிருந்தனர்.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்றைய தினம் அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்திக்கவுள்ளனர். இன்று காலை, அமைச்சர் மங்கள சமரவீரவின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இன்று மாலை மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பை நடத்தவுள்ளனர் என்று தெரியவருகிறது