சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு தண்டப்பணம் விதிப்பு
பூநகரியில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவுகையாளும் நிலையஙகளுக்கு எச்சரிக்கையுடன் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவுகையாளும் நிறுவனங்களில் சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தினால் எச்சரிக்கையுடன் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
பூநகரி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமயில் பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் இணைந்து பூநகரி, ஜெயபுரம், நாச்சிக்குடா மற்றும் முழங்காவில் பகுதிகளில் கடந்த வாரத்தில் மேற்கொண்ட விசேட உணவுப்பாதுகாப்பு பரிசோதனைகளின் போது சுகாதார விதிமுறைகளுக்கு முரணாக உணவு கையாளுவதில் அடிப்படைக் கட்டமைப்புகளை சீராக பேணாமைக்குமாக ஐந்து உணவு கையாளும் நிறுவனங்களுக்கு எதிராக கடந்த செவ்வாய் கிழமை நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட இருபத்தாறு குற்றச்சாட்டுகளுக்குமாக ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் தண்டப்பணம் நீதிமன்றினால் விதிக்கப்பட்டதோடு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
மேலும் அன்றையதினம் குற்றம் சாட்டப்பட்டு வழக்கிற்காக சமூகமளிக்காத ஏனைய ஐந்து உணவுகையாளும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அந்தந்த பிரதேச பொலீஸ் நிலையங்களூடாக திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.