சிறுமியை வேலைக்கமர்த்தி சித்திரவதை செய்தது தொடர்பாக நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்கு

ஆந்திர மாநில சிறுமியை சென்னை தி.நகர் பகுதியில் உள்ள நடிகை பானுப்ரியாவின் வீட்டில் வேலை செய்த போது சித்ரவதை செய்யப்பட்டதாக கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பானுப்ரியாவின் வீட்டில் இருந்து 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் ஐ.பேட், கேமரா, மற்றும் பல விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டதாக திருட்டு குற்றம் சுமத்தி சிறுமி மீது பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
இதனையடுத்து சிறுமியையும், அவரது தாய் பிரபாவதியையும் பாண்டிபஜார் போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் பானுப்ரியாவும் அவரது சகோதரர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் சிறுமியை கொடுமைப்படுத்தியதாக சிறுமியின் தாய் பிரபாவதி ஆந்திரமாநிலம் சோமால் கோட்டை போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக ஏற்கனவே அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான தகவலை சென்னை போலீசுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் சிறுமி சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக இப்போது பாண்டிபஜார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமியை பணியில் அமர்த்தியது, தாக்கி காயம் ஏற்படுத்தியது, மிரட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகிறது .நடிகை பானுப்ரியாவும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது