Sun. Apr 12th, 2026

சமய ரீதியான சுற்றுலாத்தலங்களில் பிரதானமாக கீரிமலை மிளிரும்- வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்

எதிர்காலத்தில் சமய ரீதியான சுற்றுலாத்தலங்களில் பிரதானமாக கீரிமலை மிளிரும் என வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்தார் கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியர் மட ஆதனம் கையளிக்கும் வைபவமானது இன்று வெள்ளிக்கிழமை வலி வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய போதே வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் இவ்வாறு தெரிவித்தார்.
இவ் ஆதனம் நீண்ட காலம் தனியாருடையதாக இருந்த போதும் தற்போது நீண்ட கால குத்தகை அடிப்படையில் பிரதேசசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இவ் இடம் தொடர்பில் பொது மக்களால் பல்வேறு குறைபாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இவ் ஆதனம் பிரதேசசபை ஆதனமில்லாததால் முற்றுமுழுதாக பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலை காணப்பட்டது.
ஆனால் தற்போது இவ் ஆதனம் பிரதேச சபையிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டதால் இவ்விடத்தை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக ஈமைக்கிரியைகளுடன் சம்பந்தப்பட்ட கிரியைகளின் போது கடலில் அதிகளவு கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்களால் குறைபாடுகள் முன்வைக்கப்படுவதுண்டு. அதனை முறையாக்க குறித்த கடற்கரையை நிர்மாணிக்க 113 மில்லியனுக்கு மேற்பட்ட பாரியளவு நிதி தேவைப்பாடுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இப் பெருமளவான நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற இடர்பாடுகள் உண்டு.
இதனை பூர்த்தி செய்ய எதிர்காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியூடாக சமய கிரியையுடன் தொடர்புடைய சுற்றுலாத்துறைக்குள் உள்வாங்குவதற்கு உள்ளூராட்சி திணைக்களத்துடன் கலந்துரையாடி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
எனவே இவ்விடத்திற்கு யாழ்ப்பாணத்தைக் கடந்து கிழக்கு மாகாணத்திலிருந்தும் மக்கள் வருகைதந்து கிரியைகளை மேற்கொள்ளும் நிலையுள்ளது.
எதிர்காலத்தில் சமய ரீதியான சுற்றுலாத்தலங்களில் பிரதானமாக கீரிமலை மாற்றியமைக்கப்படும்.
இத்துடன் கடந்த வருட இறுதியில் காங்கேசன்துறை கடற்கரையில் சுற்றுலாப் பணியகத்துடன் இணைந்து மேற்கொண்ட நிகழ்வின் பின்னர் யாழ் நகரை நோக்கி சென்ற சுற்றுலாப் பயணிகள் காங்கேசன்துறையை நோக்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. 38 ஆண்டுகளாக மக்களற்று இருந்த இடத்தை மீண்டும் மீட்க வேண்டும். இதேவேளை தலைமை அலுவலகத்தை காங்கேசன்துறையில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. எனவே அனைவரது ஒத்துழைப்புடனும் வலிகாமம் வடக்கை மீண்டும் கட்டியெழுப்புவோம் எனத் தெரிவித்தார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed