சமபோஷா கிண்ணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி வசம்
யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சமபோஷா கிண்ணத்திற்கான ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியினர் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சமபோஷா கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ் இந்துக் கல்லூரி அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி வீரர் ஆருஷன் தனது அணிக்கான முதலாவது கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரி அணி வீரர்கள் தமக்கு கிடைத்த இரு வாய்ப்புக்களை நழுவ விட்டனர். ஆனால் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு ஆட்டம் நிறைவடைவதற்கு முன்னர் சில நிமிடங்கள் இருக்கும் போது மூலை உதை கிடைத்தது.இதனைச் சரியாக பயன்படுத்திய அவ்வணி வீரர் சங்கவன் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். இத்தொடரின் ஆட்ட நாயகனாக சென் பற்றிக்ஸ் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஆருஷன், சிறந்த கோல் காப்பாளராக சென் பற்றிக்ஸ் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த நிதர்ஷன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.