சதுரங்கம் விளையாட்டு அல்ல. மாணவர்களின் வாழ்க்கைக்கான வழிகாட்டி. உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்

சதுரங்கம் விளையாட்டு மட்டுமல்ல மாணவர்களின் வாழ்க்கைக்கான வழிகாட்டி என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். எக்ஸ்புலோரா நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சதுரங்கத்தில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நிறுவனத்தின் இயக்குனர் துஸ்யந்தன் தலைமையில் மானிப்பாய் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தனதுரையில் வீழ்வதும் எழுவதும் வாழ்க்கையின் படிநிலை, வீழ்ந்து கிடப்பது வாழ்க்கையின் இழிநிலை. எனவே சதுரங்கம் என்பது சதுரப்பெட்டிகளுக்கு இடையே காய்களை அசைக்கும் விளையாட்டு அல்ல மாணவர்களுக்கு தேவையான வாழ்க்கைக்கான வழிகாட்டியாகும். ஏனெனில் பொறுமை, சகிப்புத்தன்மை, அர்ப்பணிப்பு, விட்டுக்கொடுப்பு என்பவற்றுடன் சிந்தனை விருத்தியையும் ஏற்படுத்துகின்றது. இருந்தபோதும் சிறுவயதில் இருந்தே வடக்கிலும் சதுரங்கம் வளர்ச்சி கண்டு வருகின்றது. அதற்கு பெற்றோர்களும் முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் இன்னமும் முழுமையடையாமை குறையாகவுள்ளது. அதனை வெகுவிரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளை சுதந்திரமாக செயல்பட விடவேண்டும். அவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கு களங்களை அமைத்துக் கொடுத்து ஊக்குவிப்பதுடன் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துவிட வேண்டும். சதுரங்கத்தில் சில சந்தர்பத்தில் காய்களை நகர்த்தும் போது எதிரி அதனை தாக்குவான் எனத்தெரிந்தும் அதனை முன்னே நகர்த்துவான். அதுவே இலக்கினை அடைவற்கான குறிக்கோள். இது வாழ்க்கைக்கு இன்றியமையாத தொன்றாகிவிடுகிறது. எவ்வளவு நேரத்தை இழந்தாலும் காய்களை இழந்தாலும் வெற்றியை பெறுவேன். எளிதில் வீழ்ந்துவிடேன் என்ற தன்னம்பிக் கையை ஏற்படுத்துகின்றது எனத்தெரிவித்தார்.