கோத்தபாய தொடர்பான விசாரணைகள் ஆரம்பம், வெளிப்படுமா இரட்டை பிரஜாவுரிமையின் உண்மை
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, அமெரிக்க பிரஜையாக இருந்தபோது, 2005 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை – மெதமுலன வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெற்றது, மற்றும் தற்போது இலங்கை பிரஜைகளுக்கு மாத்திரம் உரித்தான இலங்கை கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டது தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள இருவேறு முறைப்பாடுகளுக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவொன்று இது தொடர்பில் விசாரணைகளை நடத்திவருவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
இலங்கை கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக கோத்தாபய ராஜபக்ஷவினால் , இரட்டை பிரஜா உரிமையை விலகிக்கொண்டமைக்கான , ஆவணங்கள் சில சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்களை உறுதிபடுத்திகொள்ளவும் , மேலதிக தகவல்களை வெளிப்படுத்தவும் உள் நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடமும் விசாரணை செய்து விஷேட வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்ய சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது .