கைலாஷின் ஹெற்றிக் கோல் றேஞ்சஸ் அணி சம்பியன்
கைலாஷின் ஹெற்றிக் கோலுடன் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மறைந்த வீரரர்கள் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் சற்று முன்னர் கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து கொலின்ஸ் அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் கைலாஷ் 7வது மற்றும் 13வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர். இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். கொலின்ஸ் அணியினருக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதிலும் கோலாக்க தவறி விட்டனர். ஆனால் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் கைலாஷ் மீண்டும் அபாரமான ஒரு கோலைப் பதிவு செய்ய பல முறை முயற்சித்த கொலின்ஸ் அணி வீரர் டேமியன் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.