Thu. Apr 18th, 2024

கால்நடை வளர்ப்பு காலத்தின் கட்டாயம்- மு.அ.சுஜீவாபுவியியல் ஆசிரியர் யா/சென்.பற்றிக்ஸ் கல்லூரி

இருக்கிறதை வைத்து மகிழ்வாக வாழாது பறக்கிறதுக்கு ஆசைப்படுகின்றோம்!
கால்நடை வளர்ப்பு காலம் கருதிய தேவையாகக் கருக்கட்டத் தொடங்கியுள்ளது. இலங்கை எனும் அழகிய பல்மொழி, பல்மதம் கொண்ட ஜனநாயக நாடாக வரைவிலக்கணப்படுத்தப்பட்ட  வரலாறாக கொண்டிருந்தாலும் அது இன்று வலிதற்றதாக வரண்டு காணப்படுகின்றது.
இலங்கையின் பொருளாதாரம் ஈடாடத் தொடங்கியுள்ளது. அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடு வென ஏறத்தொடங்கியுள்ளது. அவ்வப்போது சில பொருட்களட் மாயமாக மறைந்து விடுகின்றன.
அதிலும் பால்மா பருவம் அடைந்த பெண் மறைவது போல மாயமாக மறைந்து விட்டது. இதனால் பணம் உள்ளவர்களாலும்  பால்மாவைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் நிறை உணவான பால்மா தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்பதை அறிந்து அதற்கான தயார்படுத்தல்கள் மக்கள் மயப்படுத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.
ஏனெனில் வடக்கு இயற்கையின் வரப்பிரஸாதத்தால் வறுமை இன்றி வாழ்ந்த இடம். ஒவ்வொரு பொருட்களையும் பண்டமாற்று முறையின் மூலம்  நிறைவாகப் பெற்று நீடுழி காலம் வாழ்ந்த இனம் வறுமை என்பதை வார்த்தையால் மட்டும் கேட்ட இனம் இன்று அதற்குள் தள்ளப்படுவது எமது சுயமுயற்சி, சுயபொருளாதாரம் இல்லாமையே ஆகும்.
எனவே வடக்கின் பேண்தகு அபிவிருத்திக்கு பொருத்தமான தந்திரோபாயங்களில் கால்நடை வளர்ப்பு இன்றியமையாததொன்றாகும். ஏனெனில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் கால்நடை, கால்நடை வளர்ப்பு உற்பத்திப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பது எதிர்பார்ப்பு.
வறுமை ஒழிப்பில் கால்நடைகளின் பங்கு காலமறியா காலத்தின் தேவையாகும். ஏனெனில் காலங்களை வரையறைக்குள் உட்பத்தினாலும் கால்நடைகளையோ அதன் உற்பத்தி பொருட்களையோ வரையறைக்குள்  கொண்டு வரமுடியாது. அதன் தேவை என்பது அதிகரித்துக் கொண்டே செல்லும்.
கால்நடை மனிதத்தேவைக்கான புரதங்களை மட்டுமன்றி தாவர உற்பத்திக்கான பசளைகளையும் வழங்குகின்றது. ஒரு ஹெக்கரில் பயிரிடப்படும் விவசாய உற்பத்தியினை விட கால்நடை உற்பத்தியின் பெறுமதி அதிகமாக இருப்பது அண்மைகாலமாக ஊர்ஜிதப்படுத்தப்படுகின்றது.
கால்நடையின் மூலம் கிராமிய பொருளாதாரம் அதிகளவு மேம்படுத்தப்படாவிடினும். ஒரு கிராமத்தவனின் குடும்ப நாளாந்த வருமானத்தில் கால்நடையின் பங்கு பெரியதே. அதாவது உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. வருமானம் பூர்த்தி செய்யப்படுகின்றது. நிறைவான மனநிலையையும் பொழுது போக்கையும் பூர்த்தி செய்வதுடன் சூழலையும் சுத்தமாகப் பேண உதவுகின்றது.
வறுமை ஒழிப்புத் திட்டங்களில் மாடு வளர்த்தல், ஆடு வளர்த்தல், கோழி வளர்த்தல், ஊர்ப்பன்றிகள் வளர்த்தல் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். அதாவது மக்களின் தேவையும், தொகையும் அதிகரிக்கும் போது விலங்கு உற்பத்திகளின் பாவனையும் தேவையும் அதிகரித்த வண்ணமே இருக்கும்.
ஆனால் எமது இனம் காலநீரோட்டத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்வதில் சிரமப்படுவது சிறந்த வழிகாட்டல் இல்லையா என சந்தேகிக்க வைக்கின்றது. ஏனெனில் போரில் சரிந்தது தழிழர்களின் உயிர்கள், உடமைகள் மட்டுமல்ல அவர்களின் பொருளாதார கட்டமைப்பும் ஆகும்.
ஒரு இனத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு உயரும் போதே அந்த இனத்தின் சனத்தொகை கல்வி, விளையாட்டு, கலைகள், பண்பாடுகள் அதிகரித்து பாதுகாக்கும் தன்மை உருவாகும் இல்லையேல் இனத்தின் கட்டுக்கோப்பான கட்டுமானம் சிதைந்து விடும்.
இதற்குக் காரணம் போருக்குப் பின் தமிழரின் விவசாயம், கால்நடைவளர்ப்பு, கடற்றொழில், சிறுகைத்தொழில் என்பன ஊக்குவிக்கப்படாது எல்லோரும் அரச தொழிலுக்கு உள்வாங்கப்பட்டமை. சுய பொருளாதார உற்பத்தியை கேள்விக்குள்ளாக்கி அரசை கையேந்தும் நிலைக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் அரசும் வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே இன்றைய இலங்கைப் பொருளாதாரத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் ஏற்றுமதி அற்ற இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால் இலங்கையில் வாழும் மனித உயிர்கள் அன்னிய நாடுகளின் உதவி இன்றி வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் ஏற்படப்போகும் இழப்புக்கள், பிரச்சனைகள் என்பன எண்ணில் அடங்காதவையாகவும், எண்ணிக் கொள்ள முடியாதவையாகவும் பரிணமிக்க போவதை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்ட தவறவில்லை.
இதிலிருந்து விடுபட வடக்கு, கிழக்கு தழிழர் தேசம் புதிரான புலமைகளை முன் நகர்த்தி கால்நடை வளர்ப்பில் எல்லோரையும் அக்கறை கொண்டு செயல்பட ஊக்கப்படுத்த வேண்டும். பசுவை வளர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள் சொல்லில் அடங்காது சொல்லிமாளாது என்பர் அதற்கமைய மனித உயிரையும் ஆயுட்காலத்தையும் நீடுழி காலம் வைத்திருக்க ஆரோக்கியமான நிறை உணவான பாலையும் அதைத் தொடர்ந்து தயிர், நெய், மோர் என வீட்டுக்குத் தேவையானது போக மேலதிகமானவை பணமாக மாறுகின்றது. அதுமட்டுமன்றி இராசாயனமற்ற, தொற்றா நோய்களையும் ஏற்படுத்தாத உணவாகவும் காணப்படுகின்றது.
எனவே இனிவரும் காலம் ஆபத்தானதும், அபத்தமானதாகவும் உருவாக போகின்றது. பணத்தின் பெறுமதி குறைந்து (ரூபா) செல்கின்றது. பொருட்களின் பெறுமதி(விலை) ஏகிறுகின்றது. இதனால் மக்கள் வாழ முடியாத வாழ்வாதாரத்தை இழக்கின்ற நேரம் நெருங்குகின்றது.
இதனைக் கருத்திற் கொண்டு ஒவ்வொருவரும் தம்தைத் தாமே தயார்படுத்தி விவசாயம் கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில்களில் ஈடுபட நேரத்தை ஒதுக்கி கொள்ள முனைய வேண்டும். இல்லையேல் வறுமை என்பது எங்களையும் வாட்டத் தொடங்கிவிடும். அதனைத் தவிர்க்க இன்றே செய்வோம் நன்றே வளர்ப்போம் கால்நடைகளை அதற்கான காலநிலை, நிலஅமைப்பு, இயற்கை என்பன எம்மிடம் தாரளாமாக உள்ளது.
எனவே வெளிநாட்டு பால்மாக்களை கையேந்தி கையேறு நிலைக்கு தள்ளப்படாது. எமது கைகளில் ஆளுக்கொரு பசுவையும்,ஆட்டையும் வைத்திருப்போம் ஏழைகளின் பசு என வர்ணிக்கப்படும்.ஆடு ஏழ்மையை போக்கவல்லது. எனவே எம்மிடம் இருக்கிறவற்றை வைத்து மகிழ்வாக வாழாது பறக்கிறதுக்கு ஆசைப்படுகின்றோம் ஏனெனில் வெளிநாட்டு இறக்குமதியில் தொற்றுநோய்களும், தொற்றாநோய்களும் ஒன்றாகும் என்பதை உணரவேண்டும்.
ஆக்கம்
மு.அ. சுஜீவா (புவியியல் ஆசிரியர் சென்.பற்றிக்ஸ் கல்லூரி)

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்