காணி பிடிப்பு வர்த்தமானி அதிரடியாக இடைநிறுத்தம் – உயர் நீதிமன்றம் உத்தரவு

*ஊடக வெளியீடு*
காணி பிடிப்பு வர்த்தமானி அதிரடியாக இடைநிறுத்தம் – உயர் நீதிமன்றம் உத்தரவு
காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி M. A. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தகமானியை தற்காலிகமாக வலிதற்றதாக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளநிலையில், அதற்கிடையில் குறித்த வர்த்தமானியை மீள கைவாங்குவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இல. SC/FR/112/25 இல் மனுதாரர் M.A.சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் க. கனக-ஈஸ்வரன், விரான் கொறேயா மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொண்சேகா, நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர்.