Thu. Jan 23rd, 2025

காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வடக்கில் மேலும் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் .முப்படையினருடனும் இணைந்து வடக்கிலுள்ள காணிகளை பார்வையிட்டு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு உள்ள விடுவிக்கக்கூடிய நிலங்களை துரிதமாக இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அது தொடர்பான அறிக்கையொன்றினை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் ஆம் திகதிக்கு முன்னர் ஆளுநரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற வடக்கின் நில விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடலில் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, மற்றும் பாதுகாப்பு , முப்படைத் தளபதிகள் பங்கேற்றிருந்தனர். இதில் உரையாற்றிய ஜனாதிபதி தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இராணுவ முகாம்கள் அவசியமாகும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இதற்கான ஒரு தேவையை உணர்த்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார் .விடுவிக்கக்கூடிய அனைத்து நிலங்களையும் விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி, பேச்சுவார்த்தைகளினூடாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்பதையும் தெரிவித்தார் . மேலும் கூறிய அவர் , தனியார் நிலங்கள் இராணுவ முகாம்களுக்காக தேவைப்படுமாயின் அந்த நிலங்களுக்கான நட்டஈடு வழங்குதலை துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கினார் .
இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும்  எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்