கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகள் தீவிரம்
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், டெங்கு நுளம்பு பெருகுவதற்கு காரணமாக இருக்கும் வீடுகள், வர்த்தக நிலையங்கள், அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன.
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் வீடுகள், வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்களுக்கு தரிசிப்பு மேற்கொள்ளப்பட்டு டெங்கு நுளம்பு அல்லது டெங்கு குடம்பி பெருகக் கூடிய இடங்கள் காணப்படின் அவர்களுக்கு சிவப்பு அட்டை அறிவித்தல் வழங்கப்படுவதுடன், குறித்த காலப்பகுதியில் சீர் செய்யப்படுகிறதா எனவும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் அவதானிக்கப்பட்டு அப்பகுதியில் புகையூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றனர். டெங்கு நோயால் மரண சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயற்பட்டு, டெங்கு நோயை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கரவெட்டி சுகாதார அதிகாரி பணிமனையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.