ஒஸ்மானியாக் கல்லூரி மோதல் விவகாரம் – பொலீஸ் நடவடிக்கைக்கு உட்படுத்தி விசாரிக்க தீர்மானம்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று முன்தினம் (24) இடம்பெற்ற பயிற்சி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே இடம்பெற்ற மோதல் அசம்பாவிதம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திற்கும் – யாழ்ப்பாணம் வலயக் கல்வி பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இச் சந்திப்பில் நேற்று முன்தினம் (24) இடம்பெற்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான இருதரப்பு மோதல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அமைவாக ஆசிரியர் மற்றும் பாடசாலை இரு தரப்பினரையும் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும், வலயக்கல்வி அலுவலகத்தினால் மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்திற்கு இது குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்றும், மேற்படி பொலீஸார் மற்றும் மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களம் இணைந்து உரிய சட்ட விசாரணைகளை முன்னெடுத்து முறையான தீர்மானம் ஒன்றை நீதிமன்றிற்கு ஊடாக முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
அந்த வகையில் மோதலுடன் தொடர்புடைய பயிற்சி ஆசிரியர் அவர் தரப்பிலும், பாடசாலை சார்பில் அதிபர் தரப்பிலும் பொலீஸில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இதே நேரம் ஆசிரியர்களிலும் ஒரு சிலர் தமது சொந்த விருப்பத்தில் இடமாற்றத்தை கோரி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலமான கடிதம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.
இது குறித்து தான் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் குறிப்பிட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
மேலும் ஆசிரியர்கள் தொடர்பான ஒரு சில விவகாரங்கள் தொடர்பிலும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு பணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தது.
இது தொடர்பில் தனக்கு எழுத்து மூலம் அறிக்கை சமர்பிக்குமாறு பணிப்பாளர் அவர்கள் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.