ஐக்கிய ராஜ்யம் தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் நடாத்திய 16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் வசாவிளான் மத்திய கல்லூரி அணி சம்பியன்

ஐக்கிய ராஜ்யம் தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் நடாத்திய 16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் வசாவிளான் மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் வசாவிளான் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி அணி மோதியது.

முதல் பாதியாட்டத்தில் வசாவிளான் மத்திய கல்லூரி அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் அவ்வணி வீரர் ரஜீவ் தனது அணிக்காக முதலாவது கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் வசாவிளான் மத்திய கல்லூரி அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.

இரண்டாவது பாதியாட்டத்தில் இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி அணி வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் தமக்கு கிடைத்த மூன்று வாய்ப்புக்களை கோலாக்கத் தவறி விட்டனர். ஆனால் வசாவிளான் மத்திய கல்லூரி அணி வீரர் ரஜீவ் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மேலும் ஒரு கோலைப் பதிவு செய்தார். ஆனால் சற்றும் சளைக்காமல் இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி அணி வீரர்கள் வெற்றிக்காக போராடினர். இதன் பயனாக அவ்வணி வீரர் அஸ்வின் மிக நேர்த்தியான கோலைப் பதிவு செய்ய ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக்கட்டத்தை எட்டியது. அதன் பின்னர் இரு அணிகளும் பலமுறை முயற்சித்த போதிலும் இரு அணிகளாலும் மேலதிக கோல்களை பதிவு செய்ய முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் வசாவிளான் மத்திய கல்லூரி அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதில் ஆட்ட நாயகனாக வசாவிளான் மத்திய கல்லூரி அணி வீரர் ரஜீவ்,

தொடர் ஆட்ட நாயகனாக இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி அணி வீரர் அஸ்வின்,

சிறந்த கோல் காப்பாளராக வசாவிளான் மத்திய கல்லூரி அணி வீரர் ஆகாஷ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
யாழ் மாவட்ட பாடசாலைகள் விளையாட்டு சங்கம் தலைவர் கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் பெ.வசந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக மகாஜனாக் கல்லூரி ஓய்வு நிலை அதிபரும் முன்னாள் யாழ் மாவட்ட பாடசாலைகள் விளையாட்டு சங்கம் தலைவருமான
ம.மணிசேகரன் அவர்கள் கலந்து கொண்டார்.