எழுக தமிழ்” நிகழ்வு ஒரு தரப்பை முன்னிலைப்படுத்தாது, மக்கள் நலன் சார்ந்த போராட்டமாக இருப்பின் கட்சி பேதமின்றி கரம் கோர்ப்போம்
தமிழர்களின் கோரிக்கைகளுக்கான மக்கள் எழுச்சியை யாரும் தங்களின் சுய அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது.
மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களும் நீண்டகால கோரிக்கைகளும் சார்ந்த இந்த எழுச்சியை ஒரு சில அரசியல் கட்சிகள் தாம் சார்ந்ததாக்க முற்படுவார்களேயானால் அது மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் செயலாகும்.
“எழுக தமிழ்” என்ற மக்களின் அடையாளப் போராட்டத்தை நாம் எப்போதுமே வரவேற்போம். அதுமட்டுமல்லாமல் முன்னைய சந்தர்பங்களில் எம் மக்களுடன் மக்களாக நாம் உணர்வுபூர்வமாக அரசியல் இலாபம் தேடாமல் கலந்துகொண்டுள்ளோம்.
அத்துடன் நம் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தில் அனைத்து தனிப்பட்ட அரசியல் விருப்பு வெருப்புக்களை தள்ளிவைத்து விட்டு மக்கள் பக்கம் நிற்க நான் என்றுமே தயாராகவுள்ளேன், அதற்காக நம் சகல தமிழ் அரசியல் தலைமைகளின் கூட்டிணைவையும் பல சந்தர்பங்களில் வலியுறுத்தியுள்ளேன்.
ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் அதற்கு ஒருபோதும் முன்வராத நிலையில் எம் மக்கள் தாமாகவே ஒன்றிணைந்து இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பது எம் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என மார்தட்டுவோருக்கான செருப்படியாகும்.
அத்துடன் மாற்று அரசியல் கட்சிகள் / மாற்று தலைமைகள் என அடையளப்படுத்த முற்படுவோர் இன்று மக்களின் எழுச்சிப் போட்டத்தை தமது போராட்டமாக பெயரிட்டுக் கொள்ள முனைகின்றனர்.
அவ்வாறான விடயங்களை தவிர்த்து இதற்கு அரசியல் முலாம் பூசாமல் தமிழ் உணர்வுடன் இவ்வாறான போராட்டங்களில் பங்கேற்க அனைத்து உண்மையான எம் தமிழ் நெஞ்சங்கள் முன்வர வேண்டும்.
நியூஸ் தமிழுக்கு வாசகர் அனுப்பிய பதிவு