உண்மைகள் வெளியாகும்வரை போராடுங்கள்..! கத்தோலிக்க மக்களுக்கு பேராயா் கோாிக்கை..
உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடா்பான உண்மைகளை அரசாங்கம் வெளியிடும்வரையில் கத்தோலிக்க மக்கள் போராடவேண்டும். என பேராயா் கா்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளாா்.
நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய பிரதேசத்தில் மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்த பேழை மீது இனந்தெரியா நபர்கள் இன்று அதிகாலை கல்வீச்சுநடத்தி சேதமாக்கியதை அடுத்து கொதித்தெழுந்த மக்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இன்று காலை அப்பிரதேசம் பெரும் பதற்றத்தில் உறைந்ததை அடுத்து ஆயுதமேந்திய படையினரும் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் பதற்றத்தை தணிக்க அங்கு சென்ற கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை, மக்களுடன் உரையாடினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ஈஸ்டர் தாக்குதல் மற்றும் தற்போது இடம்பெற்றிருக்கும் மாதா சிலை பேழை மீதான தாக்குதல் என்பவற்றுக்குப் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் என்பதை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசாங்கத்திற்கோ அல்லது எந்த சக்திகளுக்கோ தாம் பயப்படப்போவதில்லை என்றும் ரஞ்ஜித் ஆண்டகை எச்சரித்தார்.