உடுப்பிட்டி பகுதியில் மதுபான சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு – மக்கள் போராட்டம்
உடுப்பிட்டி பகுதியில் மதுபான சாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், முன்னாள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் வியாகேசு உட்பட பொது மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று வியாழக்கிழமை காலை உடுப்பிட்டிச் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுகிர்தன் கருத்துத் தெரிவிக்கையில்
உடுப்பிட்டி பகுதியில் ஆரம்ப பாடசாலை, ஆண்கள் பாடசாலை, பெண்கள் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என மாணவர்கள் கூடும் இடத்தில் மதுபான சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படுவது தவறான செயற்பாடாகும்.
இது தொடர்பாக குறித்த அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும். மதுபான திணைக்களம் மதுபான சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் கரவெட்டி பிரதேச சபை செயலாளர் மக்களின் எதிர்ப்பை கருதில் கொண்டு இன்னமும் அனுமதி வழங்கவில்லை. ஆனால் கரவெட்டி பிரதேச செயலக செயலாளர் தனது சட்ட வரையறைக்குட்பட்டு அனுமதி வழங்க வேண்டிய தேவையுள்ளது என கூறி அனுமதி வழங்கியுள்ளார். சட்டங்களுக்கு அப்பால் மக்களின் நலன்கருதி செயற்படுகின்ற அதிகாரிகளே எமக்குத் தேவை.
உடுப்பிட்டி பகுதியில் பலரால் மதுபான சாலை திறப்பதற்கு முயற்சி செய்ய போதிலும் அவ்வப்போது மக்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. ஆனால் மக்களின் எதிப்பையும் கருத்தில் கொள்ளாது தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக இன்று யாழ்மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளோம்.
மாணவர்களுக்கு கல்வி மிக முக்கியம். இதனாலேயே அவர்கள் அவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள முற்பட்ட போதிலும் அவர்களை போராட்டத்தில் ஈடுபட வைக்காமல் பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் வீதியில் இறங்கி போராடுகின்றோம்.
இது தவறும் பட்சத்தில் அடுத்த கட்டமாக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.