இளைய தலை முறையினரை சிந்தனை அற்றவர்களாக உருவாக்கி வருகிறோம் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்
இளைய தலை முறையினரை சிந்தனை அற்றவர்களாக உருவாக்கி வருகிறோம் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.

வட்டு இந்துக் கல்லூரியின் வீதி ஓட்ட நிகழ்வு அதிபர் தனஞ்சயன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தனதுரையில் தமிழர் எப்பொழுதுமே முயற்சியுடன் செயல்படுபவர்கள். இழந்ததை மீட்டு கொள்வதில் பின்னிற்பதில்லை.

ஆனால் இன்றைய தலைமுறையினர் முயற்சி குறைந்தவர்களாகவும் செயல்திறன் அற்றவர்களாகவும் வினைதிறனை வெளிப்படுத்த முடியாதவர்களாகவும் ஏனோதானோ என்ற நிலையில் பொம்மைகளாக உருவாக்கி வருகிறோம். எதற்காக போராடினோமோ அதனை இழந்து கொண்டு வருகிறோம். கல்வியில் வீழ்ச்சி, போதையில் எழுச்சி, சிந்தனையில் சிதைவு, ஆரோக்கியத்தில் குறைவு, கலைகள் கலாச்சாரம் மறைகிறது, பண்பாடு திண்டாடுகிறது. மைதான விளையாட்டு, இளம் தலைமுறையிடம் இருந்து விலகி செல்வதுடன் கைத்தொலைபேசியில் விளையாட்டு உணவு உறக்கமின்றி நடக்கிறது. இதனால் சுய சிந்தனை இழக்கப்படுகிறது. தமது இயலுமை எது இயலாமை எது என உணரமுடியாதவர்களாக காணப்படுகின்றனர்.

போட்டியில் வெற்றி பெறுவது ஒவ்வொருவரினதும் இலக்காக இருந்தாலும் போட்டியில் பங்குகொள்வதே வெற்றிதான். எனத்தெரிவித்தவர் வெற்றி என்பது பெற்றுக்கொள்வது தோல்வி என்பது கற்றுக்கொள்வது. முயற்சியும் பயிற்சியும் எடுத்தவன் கைதட்டல் பெறுகிறான். முயற்சியும் பயிற்சியும் எடுக்கத்தவறியவன் கைதட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த போட்டிகளில் கைதட்டியவர்கள் கைதட்டல் பெற முயற்சி எடுக்க வேண்டும். எனவே இளம் தலைமுறையினர் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.