இறுதி வரை திக் திக் ஆட்டம் யாழின் நாயகன் கிண்ணம் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வசம்

கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி
இறுதி நிமிடங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ” யாழின் நாயகன்” கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் அனுமதியுடன் தெல்லிப்பளை நாமகள் விளையாட்டு கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான அணிக்கு 07 பேர் கொண்ட யாழின் நாயகன் உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று சனிக்கிழமை குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் கொற்றாவத்தை றேஞ்சஸ் எதிர் நாவாந்துறை சென்மேரிஸ் அணி மோதியது.
பெரும் திரளான ரசிகர்கள் மத்தியில் ஆட்டம் ஆரம்பமாகியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் 8 வது நிமிடத்தில் சென்மேரிஸ் அணி வீரர் மேரிசன் தமது அணிக்கான முதலாவது கோலைப் பதிவு செய்தார்.
ஆனால் சற்றும் சளைக்காமல் போராடிய றேஞ்சஸ் அணி வீரர்கள் 12 வது நிமிடத்தில் கெளதமன் ஒரு கோலைப் பதிவு செய்து பதிலடி கொடுத்தார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக்கட்டத்தை எட்டியது. மீண்டும் தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்மேரிஸ் அணி வீரர் மேரிசன் மேலும் ஒரு கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் சென்மேரிஸ் அணி 2:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.

இரண்டாவது பாதியாட்டம் இரு அணிகளுக்கும் சவாலாக அமைந்தது. இருப்பினும் 32வது நிமிடத்தில் றேஞ்சஸ் அணி வீரர் ஜானுகன் ஒரு கோலைப் பதிவு செய்து மீண்டும் பதிலடி கொடுத்தார். ஆனால் 40வது நிமிடத்தில் றேஞ்சஸ் அணியின் பின்கள வீரர் லக்சிகன் எதிர்பாராத கோல் ஒன்றைப் பதிவு செய்தார். இருப்பினும் 42வது நிமிடத்தில் றேஞ்சஸ் அணி வீரர் முறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த சென்மேரிஸ் அணிக்கு தண்டனை உதை கிடைத்தது. இதனைச் சரியாக பயன்படுத்தி நிதர்சன் கோலாக்கி பதிலடி கொடுக்க பார்வையாளர்கள் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர். இறுதி 10 நிமிடங்களும் பார்வையாளர்களின் அமோக வரவேற்பில் இரு அணிகளும் உச்சக்கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் மிக நுட்பமான ஆட்டத்தை வெளிப்படுத்திய றேஞ்சஸ் அணி வீரர்கள் 47வது நிமிடத்தில் முன்கள வீரர் ஆர்த்திகன், 48வது நிமிடத்தில் முன்கள வீரர் சுயாஸ்கான் ஆகியோர் அடுத்தடுத்து இரு கோல்களை பதிவு செய்து சென்மேரிஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். அதன் பின்னர் ஆட்ட நேர முடிவில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி 5:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று யாழின் நாயகன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
தொடர் ஆட்ட நாயகனாக சென்மேரிஸ் அணி வீரர் ஜெரின்ஸன், ஆட்ட நாயகனாக றேஞ்சஸ் அணி வீரர் ஆர்த்திகன், சிறந்த பின்கள வீரராக சென்மேரிஸ் அணி வீரர் நிதர்சன், சிறந்த கோல் காப்பாளராக றேஞ்சஸ் அணி வீரர் ஆர்நிகன், வளர்ந்து வரும் வீரராக விண்மீன் அணி வீரர் சஞ்சய், நன்னடத்தை அணியாக உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியும் தெரிவு செய்யப்பட்டனர்.