இறுதிவரை திக் திக் ஆட்டம் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி இறுதிக்குள் நுழைந்தது
கொலின்ஸ் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் ‘MEMORIAL TROPHY ‘ கால்பந்தாட்ட தொடரில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் கொலின்ஸ் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் வடமராட்சி அணிகளுக்கான ‘MEMORIAL TROPHY ‘ கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதி ஆட்டம் நேற்று சனிக்கிழமை கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
அரையிறுதி ஆட்டத்தில் நவிண்டில் கலைமதி அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இரு அணிகளுக்கும் கிடைத்த கோல் போடும் வாய்ப்புக்கள் நழுவ விட்டுக் கொண்டிருந்தனர். இதில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியினரின் பத்துப் பரிமாற்றம் மிகச் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் கலைமதி வீரர் தவராஜ் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு மிகச் சிறப்பான கோலாக மாறியது. இதனால் முதல் பாதியாட்டத்தில் நவிண்டில் கலைமதி அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டம் இரு அணிகளுக்கும் பெரும் சவாலாக மாறியது. இரு அணிகளும் கோல் கம்பம் வரை கொண்டு சென்ற போதிலும் கோல் போடும் வாய்ப்புக்கள் நழுவ விடப்பட்டன. இறுதி 5 நிமிடங்கள் திக் திக் ஆட்டமாக மாறியது. கலைமதி அணியினர் தமக்குரிய ஆட்டத்தை மாற்றி நவஜீவன்ஸ் அணி கோல் போடுவதை தடுக்கும் நோக்கில் தமது ஆட்ட வியூகத்தை மாற்றி அமைத்தனர். இதனால் நவஜீவன்ஸ் அணியினர் கலைமதி அணியினரின் கோல் பிரதேசத்தை நெருங்கிய போதிலும் கோல் போடுவதற்கு சிரமப்பட்டனர். இறுதி ஒரு நிமிடம் இருக்கையில் கலைமதி அணியினரின் தடுப்பாளர்களையும் தாண்டி நவஜீவன்ஸ் அணி வீரர் சஜீவன் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.