Fri. Mar 29th, 2024

இரத்தினக் கல் உற்பத்தியில் இலங்கை 5ம் இடத்தில்

இரத்தினக்கல் உற்பத்தி செய்யும் நாடுகளில் 5 ஆம் இடத்தில் இலங்கை உள்ளது.

இலங்கை இரத்தினக் கற்களுக்குப் புகழ் வாய்ந்ததாக இருந்துள்ளது. கிரேக்க, அராபிய, ரோம வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்து இரத்தினக் கற்களை வாங்கிச் சென்றுள்ளனர். அதனாலேயே இலங்கை ‘இரத்தினத் தீபம்’ என்ற பெயரைப் பெற்றது எனக் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் இரத்தினக் கற்களை அகழ்தல், பட்டை தீட்டுதல், மினுக்குதல், வர்த்தகம் செய்தல் ஆகியவற்றிற்கு இலங்கையின் அரச இரத்தினக்கற் கூட்டுத்தாபனம் பொறுப்பாக இருந்து வருகின்றது.

பட்டை தீட்டும் பயிற்சி நெறிகள் இரத்தினபுரியிலும் அகலிய கொடையிலும் இக்கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் இரத்தினக் கற்களை வாங்குவதில் ஜப்பான், ஹொங்கொங், சுவிற்சலாந்து ஆகிய மூன்று நாடுகள் முதன்மை வகிக்கின்றன. அத்தோடு குவைத், டூபாய், சவுதிஅரேபியா, ஐக்கிய அமெரிக்கா, சிங்கப்பூர் என்பனவும் வாங்கி வருகின்றன.

உலகில் இரத்தினக்கற்களை உற்பத்தி செய்யும் பிரதான நாடுகளான பிறேசில், பர்மா, தாய்லாந்து, தென்னாபிரிக்கா என்னும் நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவதாகவுள்ளது.

இரத்தினபுரியில் அண்மைக்காலத்தில் ஒக்க்பிட்டி, அலகா ஆகிய பிரதேசங்கள் இரத்தினக்கல் அகழ்தலில் முக்கியம் பெற்றுள்ளன. அத்துடன் பத்தலை, அவிசாவளை, பெல்மதுளை, பலாங்கொடை, றக்குவாணை என்பன இரத்தினக்கற்கள் காணப்படும் இடங்களாக உள்ளன.

இரத்தினக்கற்கள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் மலையடிவாரங்களிலும் காணப்படுகின்றன. இரத்தினபுரி இத்தகைய ஒரு மலையடி வாரத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரத்தினக் கற்கள் நரம்புப் படை அல்லது நாளப்படை எனும் சரளைக் கற்படையில்தான் காணப்படுகின்றன. நாளப்படை அழுத்தமான வட்டக் கற்களைக் கொண்டிருக்கும்.

இரத்தினக் கற்கள் பெறுவதற்குப் பூமியின் சுரங்கங்கள் தோன்றப்படுகின்றன. இதனை ‘இரத்தினக்கற் சுரங்கம்’ என்பர். நாளப்படை வரை தோண்டப்படும். நாளப்படை வந்ததும் துலாவின் உதவி கொண்டு சில தொழிலாளர் நீரை வெளியேற்ற, வேறு சிலர் இரத்தினக்கற்கள் உள்ள நாளப்படை மண்ணை வெளியேற்றுவர். இந்த மண் ‘இரத்தினக்கற் படலம்’ எனப்படும். மேலே கொண்டுவரப்பட்ட இம்மண் அரிதட்டில் இடப்பட்டு கழுவப்படும். கழுவப்பட்டபின் மதிப்புள்ள இரத்தினக் கற்களை, அழுத்தமான வட்டக் கற்களில் இருந்து பிரித்து எடுப்பர். தொழிலாளர்கள் கூலிக்கு வேலைசெய்வது கிடையாது. இரத்தினக்கற்களால் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி இவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

நிலத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட இரத்தினக்கற்கள் செதுக்கி அழுத்தம் செய்யப்பட்ட பின்பே உபயோகிக்க ஏற்றனவாகின்றன. செதுக்கி அழுத்தம் செய்தலைப் ‘பட்டை தீட்டுதல்’ என்பர். முஸ்லீம்களே பட்டை தீட்டுதலில் திறமையானவர்கள். பட்டை தீட்டுதலில் பழைய முறைகளே இன்றும் கையாளப்பட்டு வருகின்றன. இலங்கையில் இன்று காணப்படும் இரத்தினக்கற்களில் சபைர் என்ற நீலக்கல், ரூபி என்ற சிவப்புக்கல் என்பனவற்றைக் குறிப்பிடலாம். வைடூரியம் என்ற இரத்தினக்கல் றக்குவாணைப் பகுதியில் காணப்படுகின்றது. புஷ்பராகம், தொறாம்த என்ற வெண்ணீலக் கற்களும் காணப்படுகின்றன. அத்துடன் பதுமராகம், துதிமல், செவ்வந்திக் கல் எனும் இரத்தினக்கற்களுமுள்ளன.

ஆனாலும் நேரடியாக இரத்தினக் கல் அகழும் தொழிலில் ஈடுபடுவோருக்கு அவர்களின் கற்களுக்கு உரிய பெறுமதி கிடைப்பதில்லையென்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்