Fri. Jan 17th, 2025

இன்றும் மழை தண்ணீரில் மிதக்கும் கிளி, முல்லை மாவட்டங்கள்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி, வான் பாயத் தொடங்கியுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களும் வான் பாய தொடங்கியுள்ளன, அதன்படி காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் டிசம்பர் 16 முதல் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 2,570 குடும்பங்களை சேர்ந்த 8000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 1444 குடும்பங்களை சேர்ந்த 4538 பேர் பாதிக்கப்பட்டுள்ளளர். 3 நலன்புரி நிலையங்களில் 91 குடும்பங்களை சேர்ந்த 278 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1146 குடும்பங்களை சேர்ந்த 3635 பேர் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இரணைமடு குளத்தின் கீழான தாழ்நிலங்களான கண்டாவளை, தர்மபுரம், பிரமந்தனாறு, முரசுமோட்டை, புன்னைநீராவி, பெரியபுரம் குமரபுரம், ஊரியான், உமையாள்புரம், பரந்தன், புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளில் வீடுகளிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இந்த பகுதிகளை சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1126 குடும்பங்களை சேர்ந்த 3463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 நலன்புரி நிலையங்களில் 68 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாவத்தை பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் 444 குடும்பங்களை சேர்ந்த 1533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 14 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன, அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு அவசர வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

மழையினால் தென் மாகாணமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி சூரியவெவ பஹலகமவில் சுமார் 21 வீடுகள் தண்ணீரினால் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக, சுமார் 1,500 ஏக்கர் நெற்பயிர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் இன்று (18) சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

இதற்கிடையில், பதவியவில் உள்ள கம்பிலிவெவ மற்றும் வெலிஎல ஆகிய இரண்டு பாலங்கள் மூன்று வாரங்களாக நீரில் மூழ்கியதால், அப்பகுதியில் வசிக்கும் சுமார் 5,000 மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மக்களின் போக்குவரத்து வசதிகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், நேற்று முதல் படகு சேவையை ஆரம்பிக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்