ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதே நீரிழிவு நோயயிலிருந்து பாதுகாப்புப்பெறும் வழியாகும் -மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ. ஜென்சன் றொனால்ட்
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதே
நீரிழிவு நோயயிலிருந்து பாதுகாப்புப்பெறும் வழியாகும் என
நீரிழிவுதின விழிப்புணர்வில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ. ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
நாம் ஆரோக்கியமான வாழ்க்ககைப் முறையைக் கடைப்பிடிப்பதே நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு பெறும் சிறந்த வழியாகும். இதுவே தரமான வாழ்வை நாம் வாழ வழி சமைக்கிறது. எனவே மாணவப் பருவத்திலிருந்தே இதற்கு ஏற்றால்போல் எமது திறன்களையும் மனப்பாங்கையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என நீரிழிவு தடுப்பு விழிப்புணர்வு தின நிகழ்வில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் பூநகரி பேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ. ஜென்சன் றொனால்ட்.
முழங்காவில் மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான நீரிழிவு தின விழிப்புணர்வுக் கருத்தமர்வு இன்று செவ்வாய்கிழமை(14/11/2023) பாடசாலையில் நடைபெற்றது.
நீரிழிவு நோய்க்கான பரம்பரைக்காரணிகள், எமது உணவுப்பழக்கம், உடற்பயிற்சியற்ற நிலை, மாசுபடும்சூழல் போன்றன நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்துக் காரணிகளாக உள்ளன.
குருதியில் மேலதிகமாக குளுக்கோசு உயர் மட்டத்தை அடைவதே நீரிழிவு நோயாகும். எமது உடலில் இன்சுலின் எனும் ஓமோனின் சமநிலை பாதிக்கப்படுவதால் இவ்வாறு ஏற்படுகின்றது. எனவே நாம் மாப்பொருள் மற்றும் கொழுப்பு வகை உணவுகளை குறைந்தளவிலும் நார்ச்சத்து, புரதம், கனியுப்பு மற்றும் விற்றமீன்கள் அடங்கிய உணவுகளை அதிகமாகவும் உண்ணவேண்டும்.
உள்ளூரில் கிடைக்கும் மரக்கறி வகைகள், சிறிய மீன்கள் , கொழுப்பு குறைவான இறைச்சி, முட்டை மற்றும் உள்ளூர் பழங்களையும் எமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சோற்றுக்கு கறி என்பதற்கு பதிலாக கறிக்குச் சோறு எனும் வகையில் உணவை உள்ளெடுக்க வேண்டும்.
நீரிழிவு நோய்கு உள்ளாகும் போது காயங்கள் நீண்ட நாட்களுக்கு ஆறாத நிலை, அங்க இழப்பு, இதய நோய்கள், சிறுநீரக பாதிப்பு மற்றும் தோல் நோய்கள் என்பனவும் ஏற்படுவதோடு தங்கிவாழும் தன்மையையும் குறுகிய ஆயுளில் உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடுகின்றது.
எனவே நோய் இனங்காணப்பட்டவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்துகளை உள்ளெடுப்பதுடன் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சிகளுடன் தரமான வாழ்வை வாழ முடியும்.
மாணவர்களாகிய நீங்கள் நீரிழிவு நோய்பற்றிய தெளிவான அறிவைக் கொண்டிருந்தால் வருமுன் காக்கவும், ஆயுளை அதிகரித்து தரமான வாழ்வை வாழவும் அது பெரிதும் துணைபுரியும் என்றார்.