வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் கடமை புரியும் ஆசிரியர்களின் தொழில் வாண்மை விருத்தி மற்றும் அவர்களுக்கான தொழில் வாண்மை விருத்திக்கான கடமை லீவுகளை வழங்குவதில் இழுபறி நிலையை உருவாக்குவதாக அப்பகுதி ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் தொழில் வாண்மை விருத்திக்கான மேலதிக கற்கை நெறிகளை உரியவர்கள் உரிய காலத்தில் நிறைவேற்றுவதற்கு கல்வி அமைச்சு அனுமதிகள் வழங்கப்பட்ட போதும் தமது வாண்மை விருத்தியை மேற்கொள்வதற்கு அனுமதி மற்றும் கடமை லீவு பெறுவதற்கு ஆசிரியர்கள் செல்லும் போது அதனைத் தட்டிக்கழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் பதவி உயர்வுகளுக்கான கற்கை நெறிகளை மேற்கொள்வதற்கு இழுபறி ஏற்பட்டு பலதடவைகள் வலயக் கல்வி பணிமனைக்குச் சென்ற போதும் கற்கை நெறிகளுக்கான முடிவுத் திகதிகளிலேயே கையொப்பம் இட்டுத்தருவதனால் தாம் பெரும் அசெளகரியங்களைச் சந்திப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தவிர அடுத்தாண்டுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் தனிதனி ஆசிரியர்களிடமிருந்து கோரப்பட்டது. இதற்கிணங்க வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரியர்களும் தனித்தனி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்கள் மாகாண பணிப்பாளருக்கு முன்னிலைப்படுத்தப்பட்டதா அல்லது அவர்களின் இடமாற்றம் நிராகர்க்கப்பட்டதா என்கின்ற எந்த அறிவித்தலையும் குறிப்பட்ட ஆசிரிகளுக்கு எழுத்து மூலமாக வழங்கப்படவில்லை. ஆனால் ஏனைய கல்வி வலயங்களில் இவ்வாறான இடமாற்றம் கோரிய ஆசிரியர்களுக்கு எழுத்து மூலமான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான அசமந்தப்போக்கான அதிகாரிகளின் நடவடிக்கைகளில் உரியவர்கள் கவனம் எடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.