அசோகன் மற்றும் செல்வரதனின் ஆட்டத்தில் சம்பியனாகியது ஆவரங்கால் இந்து இளைஞர் அணி
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வி.சிவகுருநாதன் ஞாபகார்த்தமாக நடத்திய யாழ் அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.
இதன் இறுதியாட்டம் தற்போது குறித்த கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து புத்தூர் கலைமதி அணி மோதியது.
5 செற்கள் கொண்ட போட்டியில் 1வது செற்றில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 25:20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது செற்றில் பலத்த போராட்டத்தில் புத்தூர் கலைமதி அணி 26:24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தனர்.
ஆனால் அடுத்த இரண்டு செற்களிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆவரங்கால் இந்து இளைஞர் அணியின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் புத்தூர் கலைமதி அணி திணறியது. இதனால் 3வது மற்றும் 4வது செற்றில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 25:13, 25:17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர். இதில் சிறந்த ஆட்ட நாயகியாக ஆவரங்கால் இந்து இளைஞர் அணி வீரர் அசோகன் தொடர் ஆட்ட நாயகனாக ஆவரங்கால் இந்து இளைஞர் அணி வீரர் செல்வரதன், சிறந்த அறைதல் வீரனாக புத்தூர் கலைமதி அணி வீரர் வாகீசன், பந்தை உயர்த்தும் சிறந்த வீரராக ஆவரங்கால் இந்து இளைஞர் அணி வீரர் நிதர்சன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.